மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 540 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மையான
செய்திகளையும், கொரோனா நோய்த்தொற்றுக் குறித்த விழிப்புணர்வு செய்திகளையும்
பொதுமக்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லும் பணிகளை முன்களப் பணியாளர்களான பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள்.
கால நேரம் பாராது, அல்லும் பகலும் அயராது உழைக்கும் அனைத்துப் பத்திரிகைத்துறை மற்றும் ஊடகத்துறையினர்களும் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, செய்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (6.7.2021) சென்னை, கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இச்சிறப்பு முகாமினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி, முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் (ம) பல்வேறு பத்திரிகை சங்கங்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் 540 நபர்களுக்கு இச்சிறப்பு முகாம் மூலம் கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழக அரசின் இந்த சிறப்பான முயற்சிக்கு மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற சிறப்பு முகாம்களை மாவட்ட அளவிலும் நடத்த வேண்டுமென மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையினால் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர், இயற்கை மற்றும் நோய் எதிர்ப்புத் தேநீர் பொடி,ஆடாதோடை மணப்பாகு, அமுக்கராச் சூரணம் மாத்திரை மற்றும் தாளிசாதி வடகம் ஆகிய கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான இந்திய முறை மருந்துகள் அடங்கிய தொகுப்பினைத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள்.
இம்முகாமில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் இயக்குநர் திரு.எஸ்.கணேஷ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்
முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர்(வருவாய் & நிதி) திரு.விஷு மஹாஜன், இஆ.ப., துணை ஆணையர் (மருத்துவம்) டாக்டர் மனீஷ், இ.ஆ.ப., துணை ஆணையர்(கல்வி) திருமதி. சினேகா, இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் இணை இயக்குநர் திரு. பார்த்திபன், செய்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்