16.07.2021 தேதியிட்ட உச்சநீதிமன்ற ஆணையின்படி பேரறிவாளனுக்குப் ‘பரோல்’ நீட்டிப்பு வழங்க வேண்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
“ கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக சிறைவாசிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்த வழக்கில் கடந்த 07.05. 2021 அன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2020ஆம் ஆண்டு இதே வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுக்களின் பரிந்துரைகளின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் 90 நாட்களுக்குப் பிணை வழங்க வேண்டுமென்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று (16.07.2021) மீண்டும் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ’தனது ஆணையின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் எவரையும் இப்போது சிறையில் அடைக்கக் கூடாது, உச்சநீதிமன்றம் அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரையும் தொடர்ந்து பிணையில் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைத்த உயர்அதிகாரக் குழு கடந்த 19.05.2021 ஆம் தேதி கூடி எடுத்த முடிவில் “ 19.05.2021 வரை 95 தண்டனை சிறைவாசிகளும் 708 விசாரணைக் கைதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒரு தணடனை சிறைவாசியும் ஒரு விசாரணைக் கைதியும் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல சிறைப் பணியாளர்களில் 730 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 6 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் 16.07.2021 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் ,” மாநில அரசுகள் சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளில் சிறைவாசியின் வயது, இணை நோய்கள் முதலான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனவா?’ என்பதை 22.07.2021 ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கூறியுள்ளது. எனவே சிறைவாசிகளைப் பிணையில் விடுவதென்பதில் சிறைகளில் உள்ள இட நெருக்கடியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள பிற அம்சங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
திரு பேரறிவாளனின் தாயார் திருமதி அற்புதம்மாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கருணை உள்ளத்தோடு திரு பேரறிவாளனுக்கு வழங்கியுள்ள சாதாரண விடுப்பை உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின்படி ’அது அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை’ நீட்டித்து, தொடர்ந்து அவரை பரோலில் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று மெத்தப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்