சிவில் விமானப் போக்குவரத்து துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அரசு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
*இந்திய விமான நிலைய ஆணையரகம் சார்பில் அடுத்த வரவுள்ள 4 முதல் 5 ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யவும், மாற்றங்கள் ஏற்படுத்தவும், விமான ஓடுதளங்களை வலுப்படுத்தவும், விமான நிலையங்களுக்கான திசைகாட்டு கருவிகள், கட்டுப்பாட்டு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் ரூ.25,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.
*நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதுவரை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி, மேற்கு வங்கத்தில் துர்காபூர், சிக்கிமில் பாக்யாங் (Pakyong), கேரளாவில் கண்ணூர், ஆந்திராவில் ஓர்வக்கல் (Orvakal) மற்றும் கர்நாடக மாநிலம் கல்புரகி ஆகிய 6 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
*விமான போக்குவரத்து துறையில் மேலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது
போன்ற ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து துறை மீட்பு நடவடிக்கைகள்
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
இக்காலகட்டத்தில், மத்திய அரசால் விமான போக்குவரத்து துறையை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:
*விமான நிறுவனங்களுக்கு ஏராளமான கொள்கை நடவடிக்கைகள் மூலம் உதவுவது
*விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய விமான நிலைய ஆணையரகம் மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் வழங்குவது
*ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களிலும், புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள விமான நிலையங்களிலும் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்
*சிறப்பான விமான திசைகாட்டு அமைப்புகள் வழங்குவது
போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் உள் நாட்டு விமானப் போக்குவரத்து, கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதமாக உள்ளது.
வந்தே பாரத் திட்டம்
வந்தே பாரத் திட்டம் 07.05.2020 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், 24.07.2021 வரை 88,000 விமானங்கள் இயக்கப்பட்டு , 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 71 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் இந்தியா வந்தடைந்துள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.