நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் பதிலளித்தார்.
கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் குறித்த திருமதி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடலோர மற்றும் கடல்புற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக கூறினார்.
அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை என்ற நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கையை பின்பற்றி வரும் அரசு, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய, மக்கள் சார்ந்த பிராந்திய கட்டமைப்புகளை நிலைத்தன்மை மற்றும் வளத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கி வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் சார்ந்த விஷயங்களை அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாகவும், அவற்றை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் கடல்பரப்பு மற்றும் கடற்கரை பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, மாநில கடலோரக் காவல் படை மற்றும் சுங்கம் மற்றும் துறைமுக பொறுப்பு கழக ரோந்து படை உள்ளிட்ட முகமைகள் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதர உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பாதுகாப்பு உபகரணங்களுக்காக இறக்குமதிகளை சார்ந்திருப்பதை வரும் வருடங்களில் குறைக்கும் விதத்தில், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை 2020 உருவாக்கப்பட்டு, 209 பொருட்களின் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆயுத தொழிற்சாலை வாரியம், 9 பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள், 6 இதர பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 37 தனியார் நிறுவனங்களின் வருடாந்திர விற்றுமுதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17-ல் ரூ 74054 கோடியாக இது இருந்த நிலையில், 2020-21-ல் ரூ 84694 கோடியாக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு சைபர் முகமையை நிறுவ அரசு ஒப்புதல் அளித்தது. இந்த முகமை தற்போது முழுக்க செயல்படும் நிலையில் உள்ளது. சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், முப்படைகளும் தங்களது சைபர் அவசரகால எதிர்வினை குழுக்களை அமைத்துள்ளன.
மேலும், தேசிய சைபர் பாதுகாப்பு யுக்தியை இந்திய அரசு வகுத்து வருகிறது. நம்முடைய பல்வேறு துறைகளுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை கண்டறிந்து முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) செயல்படுத்தி வருகிறது. 2018 ஜூலை 1 முதல் 2021 ஜூன் 30 வரை மொத்தம் 239 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஏவுகணை அமைப்புகள், வான் வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, போர் விமானங்கள், கவச வாகனங்கள், பால மற்றும் சுரங்க அமைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய போர் நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கட்டுமான செலவு ரூ 176.65 கோடி ஆகும். தேசிய போர் நினைவுச் சின்னத்தில் டிஜிட்டல் ஈர்ப்புத்தன்மை மிக்க திட்டத்தை நிறுவும் பணி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
வீரதீர விருதுகள் வென்றோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இணையதளம் 2017-18-ம் வருடம் ரூ 7,11,500 செலவில் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ 1,59,000 செலவில் இணையதளத்தின் மேம்பாட்டிற்காக பாதுகாப்பு தேசிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டது.
இதற்கிடையே, உலகத்திலேயே வாகனத்தில் செல்லக்கூடிய உயரமான சாலையை எல்லையோர சாலைகள் நிறுவனம் கட்டமைத்துள்ளதாக செய்திக் குறிப்பொன்றில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உம்லிங்க்லா பாஸில் உள்ள இந்த சாலை 19,300 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு முன் உலகத்திலேயே வாகனத்தில் செல்லக்கூடிய உயரமான சாலையாக இருந்தது பொலிவியாவில் உள்ள ஒரு சாலையாகும்.
உம்லிங்க்லா பாஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சாலையின் மூலம் லடாக்கில் சமூக-பொருளாதார நிலைமை மேம்பட்டு, சுற்றுலாவுக்கு ஊக்கம் கிடைக்கும்.
என கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்.