சென்னையில் உள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75ஆவது இந்திய சுதந்திரப் பெருவிழா & கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த வீடியோ வேன்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன. விழுப்புரம் மாவட்டத்திற்கான இந்த வீடியோ வேன் பிரச்சாரத் துவக்க விழாவை புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடர்பு கள அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று (24-8-2021) காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இந்த வீடியோ வேன் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு த.மோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அங்கிருந்த பொதுமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.
இந்தத் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஏ.ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் எஸ்.பொற்கொடி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் திரு சுரேந்திர ஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) திரு.ரெ. நந்தகோபாலகிருஷ்ணன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ராம்பிரசாத் உட்பட பலர் இந்த துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 32% மக்கள் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். இதில் ஒரு தவணை மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் அடங்குவர். சாதனை அளவாக நேற்று(23.8.2021) மட்டும் 23,000 பேருக்கு தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுதான் இந்த வீடியோ வேன் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
இந்த வீடியோ பிரச்சார வேன் இன்று (24-8-2021) விழுப்புரம் நகராட்சி, அனந்தபுரம், மேல்மலையனூர், செஞ்சி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளிலும் நாளை (25-8-2021) நாணமேடு, காணை, மாம்பழப்பட்டு, முகையூர், அரகண்டநல்லூர், பகுதிகளிலும் 26-8-2021 அன்று கோலியனூர், வளவனூர், சிறுவந்தாடு, கண்டமங்கலம், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடும்.
புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் வரவேற்றார். நிறைவில் களவிளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.