தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலை அறிவித்தது. வேட்புமனு பரிசீலனை முடிந்து ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்கள் பரிசு பொருட்கள், பணம், மதுபாட்டில்கள் வழங்குவதை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நள்ளிரவில் திருவண்ணாமலை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் வந்த பேருந்தை நிறுத்தி, தனி வட்டாச்சியர் ஜெயலஷ்மி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராசு, முதல்நிலை காவலர், பிரபாகரன், இரண்டாம் நிலை பெண் காவலர் நிஷாந்தி, கிராம உதவியாளர் சகாயராணி ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த சாக்கு பையை சோதனை செய்த போது அதில் 73 புடவைகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி தட்சிணாமூர்த்தி (34) என்பவர் எடுத்து வந்துள்ளார். அதே போல் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த விழுப்புரம் வண்டிமேடு கற்பூர வியாபாரி இப்ராஹிம் என்பவரிடம் இருந்து 1,52,900 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் விழுப்புரம் பகுதியில் இருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்துள்ளனர். அதற்குள் அந்த நபர் போலீசாரை கண்டதும் தான் எடுத்துவந்த பெட்டியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் அந்த பெட்டியை சோதனை செய்ததில் அதில் 63 குவாட்டர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, பேருந்தில் 1,52,900 பணத்தை எடுத்துவந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த இப்ராஹிம், 74 புடவையை எடுத்து வந்த தட்சிணாமூர்த்தி(30), தேவனூர் கூட்டு சாலையில் ஓட்டம்பட்டு கிராமத்தில் இருந்து ஆரணிக்கு காரில் எடுத்துச்சென்ற 455 புடவை என அனைத்தையும் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கணக்காளர் சிவராமனிடம் ஒப்படைத்தனர் . இதனிடையே அரகண்டநல்லூர் காவல் நில சரகம் தபோவனம், கிராமத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒருவர் கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வந்த 900தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் மற்றும் 160 குவார்ட்டர் மதுபாட்டில்கள், வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 140குவார்ட்டர் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.