கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்திப்பாக்கம் சோதனை சாவடியில் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமை பெண் காவலர்கள் ஷகிலா பானு, சுமதி ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், வாகனத்தில் 1 ரூபாய், 5 ரூபாய் என என்பது மூட்டைகளில் எட்டு லட்சம் ரூபாய் சில்லரை நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, வாகனத்தையும் அதில் வந்த மூவரையும் பிடித்து தேர்தல் பறக்கும் படையினர் திருக்கோவிலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
அங்கு மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த மளிகை வியாபாரி பெரியசாமி என்பவர், சித்தூர் இந்தியன் வங்கியிலிருந்து வியாபாரத்திற்காக சில்லரை நாணயங்களாக 1 ரூபாய், 5 ரூபாய் என எட்டு லட்சம் ரூபாய்க்கு 80 பைகளில் சில்லறை நாணயங்கள் வாங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சித்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மேலாளருக்கு தொடர்புகொண்டு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் வங்கியில் இருந்துதான் கொடுக்கப்பட்டதா என உறுதி செய்து கொண்ட பின்னர் பிடிபட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்ட நாணயங்கள் அடங்கிய பைகளையும் மீண்டும் ஒப்படைத்தார்.
மேலும், வாகனங்களில் வந்த பெரியசாமி மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் குமார் ஆகியோரை உரிய பாதுகாப்பின்றி இது போன்ற பெரிய தொகைகளை நெடுந்தூரம் எடுத்துச் செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். 8 லட்ச ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பிடிக்கப்பட்டு பின்னர் ஆவணங்கள் இருந்ததையடுத்து, மீண்டும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.