தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பதற்கு பலத்திட்டங்களை வகுத்து வருகிறார். உட்கட்சி பூசலும் அதிகரித்து வருகிறது. அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் இணைந்தவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் பா.ஜ.கவில் இணைய நினைப்பவர்கள் அனைவரும் அண்ணாமலை முன்னிலையில் தான் இணைய வேண்டும் என நினைக்கிறார்கள். இது மாவட்ட தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்ற வாரம் தமிழக பா.ஜ.கவில் புதிய பிரிவு தொடங்கப்பட்டு அமர் பிரசாத் ரெட்டி என்பவரை நியமித்தார் அண்ணாமலை . அந்த அமர் பிரசாத் ரெட்டி என்பவரை பல மாவட்ட தலைவர்களுக்கு தெரியவே இல்லை. கட்சிக்காக அவர் என்ன செய்தார் எதற்காக இந்த பிரிவு புதிய பதவியா என்ற சலசலப்பும் எழுந்தது.
இந்த நிலையில் தான் மற்றொரு சம்பவம் பாஜகவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கலிவரதன். இவரை, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணை தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நாகப்பன்கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 20 பெண்கள் மற்றும் பா.ம.க.,வினர் 50க்கும் மேற்பட்டோரை, திருமண விழாவிற்கு வரும் அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த கலிவரதன், ‘அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது’ என்றார். அதற்கு நாகப்பன், ‘பசங்க ஆசைப்படுகின்றனர்’ என தெரிவித்தார்.
பதில் அளித்த கலிவரதன், ‘அவங்க கேட்பதற்காக நாம் செய்ய முடியாது. பதவிக்கு மரியாதை கொடுங்கள். நான் வந்தால் தான் கட்சியில் சேரணும். அண்ணாமலை என்ன கடவுளா. உனக்கு நான் கடவுளா, அவர் கடவுளா.’அப்பறம் ஏன் அண்ணாமலையை கூப்பிட்டு வா, திருவண்ணாமலையை கூப்பிட்டு வான்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க. என்னைவிட பெரிய ஆளு யாரும் கிடையாது’ என்றார்.