கோவையிலுள்ள சின்னசாமி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் தான் அன்புக்கரசி(39). இவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்று அங்கு வகுப்பில் பாடம் நடத்திவிட்டு பள்ளியில் ஆசிரியைகளுக்கென்று இருக்கும் அறையில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பள்ளிக்கு வருகை தந்தார். பள்ளிக்குள் வந்த அவர் ஆசிரியைகள் அறைக்கு சென்று ஆசிரியை அன்புக்கரசியை சந்தித்த அந்த நபர் அவரிடம், தன்னுடைய மகனை இந்த பள்ளியில் சேர்க்க விரும்புகிறேன், அதனால், பள்ளியில் சேர்க்க எவ்வளவு செலவாகும்? மேலும் இப்பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? என்று நம்பிக்கை வருவது போலவே பேசினார்.
அந்த ஆசிரியையும் பள்ளியில் சேர்ப்பதற்கான சேர்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி விளக்கமாக கூறிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராமல் அந்த நபர் திடீரென தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை வெளியே எடுத்து, ஆசிரியை அன்புக்கரசியின் கழுத்தில் வைத்து மிரட்டலான தொனியில் ஆசிரியை அணிந்திருந்த நகைகளை கேட்டுள்ளார். மேலும், நகைகளை தராவிடில் கத்தியால் குத்தி உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியை தான் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 10½ பவுன் நகைகளை கழற்றியுள்ளார்.அந்த நகைகளை உடனடியாக பறித்து கொண்ட அந்த நபர் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். அதன் பின்னர் ஆசிரியை சத்தம் போட்டார். ஆனால், மற்ற ஆசிரியர்கள் அங்கு வருவதற்குள் அந்த கயவன் அந்த இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து அன்புக்கரசி காட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு ஆள் நடமாட்டமுள்ள பட்டப்பகலிலேயே அதுவும் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையின் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் ,பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.