விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் உட்பட்ட விழுப்புரம் – திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் சித்தாமூர். இந்த கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த இரண்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 4 சவரன் தங்க நகைகள், எட்டாயிரம் ரூபாய் பணம் மற்றும் 1/2கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று இரவு உத்திரகுமார் தனது மாமியார் வீடான வி.புதுப்பாளையம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து இரண்டு பீரோவில் இருந்த நான்கு சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் குத்துவிளக்கு உட்பட 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். காலை பக்கத்து வீட்டிலிருந்த நபர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் வீட்டின் உரிமையாளர் உத்திரகுமாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த உத்திரகுமார் வீட்டில் நகை பணம் வெள்ளி பொருட்கள் குத்துவிளக்கு கொள்ளை அடிக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு, அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர். விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.