“பொதுமக்கள் பாதுகாக் கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலர் இறையன்பு தலைமையில்யில், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துவது நல்லது. தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரால் கழுவ வேண்டும்.
வெள்ளநீரில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சித்த மருத்துவர்கள் மேற் பார்வையில் வழங்கப் படும், நிலவேம்பு, கப சுரக் குடிநீர் அருந்துதல் நலம். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.
குளங்கள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகள் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பார்க்க நேர்ந்தால் உடனடியாக 104ல் பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப்பானது அல்ல. வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு தேவையின்றி போகக்கூடாது.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், முகாமில் தரப்படும் குடிநீரை மட்டுமே அருந்தவேண்டும். தற்காலிக முகாம்களில், கொரோனா தடுப்பு முறைகள், முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.