விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து, இரண்டு முட்டைகளை தனியாரிடம் விற்கும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் செல்லும் லாரி விருத்தாசலம் அடுத்த காணாது கண்டான் கிராமம் அருகே நிறுத்தப்படுகிறது.
அங்கு மொபட்டில் வரும் மர்ம நபர், லாரியில் இருந்து இரண்டு அரிசி மூட்டைகளை பெற்று எடுத்துச் செல்லும் காட்சி உள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர் உறுதுணையாக உள்ளனர். இதுகுறித்து விருத்தாசலம் குடோன் கண்காணிப்பாளர் அசோகன் கூறுகையில், குடோனில் இருந்து பொருட்களை அனுப்பி வைப்பது மட்டுமே எங்கள் வேலை, வெளியில் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து எங்களுக்கு தெரியாது. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.