கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
அத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த பேருந்தில் சுமார் 250 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹாண்ஸ் பாக்கெட் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலாவை கடத்திவந்த பெங்களூர் பகுதியை சேர்ந்த சுனில் என்பவரை கைது செய்து கவால் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இதுபோல் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 29 தேதி திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கூட்ரோடு பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு இடத்தில் இதுபோல் சோதனையில் குட்கா பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.