நோரா வைரஸ் கேரளாவில் பரவலையடுத்து தமிழக கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தலமைச் செயலாளர் வே.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் 5000 மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டு, 6000க்கும் மேற்பட்ட முகாம்கள் இன்று நடைபெறுகிறது.சென்னையில் மட்டும் 750 இடங்களில் திட்டமிடப்பட்டு 1000-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களுக்கு கொரோனா சிகிச்சையும், கூடவே தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது என கூறினார்.
மேலும், மழைக்கால உபாதைகளில் இருந்து மக்களை காக்கவே இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. குடிசைப் பகுதிகளில் வீடுதோறும் ப்ளீச்சிங் பெளடர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற மருத்துவ முகாம் மூலம் 3.5 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர், 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் தமிழகத்தில் இதுவரை 72% முதல் தவணையும், 33% இரண்டாவது தவனை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். நவம்பர் முடிவில் முதல் தவனை தடுப்பூசியை 100% இலக்கை எட்ட வேண்டும் என்ற நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் தற்போது 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.
நோரா வைரஸ் கேரளாவில் வந்திருப்பதாக கிடைத்த தவலை அடுத்து தமிழக கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நோரோ வைரஸ் விலங்குகளில் இருந்து பரவுகிறது, அதற்கான மருந்துகள் தமிழகத்தில் தயாராக உள்ளது.
எல்லை பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ரயில் மற்றும் விமானம் மூலம் கேரளாவில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.