இது சற்றே விநோதமான வழக்கு, 2013 யில் இருந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், மூத்த வழக்கறிஞர் திரு KK வேணுகோபால் இந்திய ராணுவத்தினர் தங்களுடைய ஆயுதங்களை கொண்டு செல்லக்கூட சரியான சாலை வசதி இல்லை. ஆயுத தளவாடங்கள் இல்லாமல் எல்லையில் நமது ராணுவம் வெறுங்கையுடன் நிற்க சொல்கிறீர்களா என உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆனாலும் கூட உச்ச நீதிமன்றம் அசைந்த பாடு இல்லை.
என்னதான் நடக்கிறது. விஷயம் இது தான். பனி மலை சிகரங்கள் புவி வெப்பமடைதல் காரணமாக உருகி வருகிறது.பூகோள ரீதியாக இந்த உலகின் மூன்றில் ஒரு பங்கு நமது தேசத்தின் எல்லையில் உள்ள இமயமலை தொடரும் இந்த சிக்கலில் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் அங்கு எந்த விதமான கட்டுமான வேலைகளும். உள் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தக் கூடாது என NGO அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்காடி வருகின்றனர்.
அதாவது 2013 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எதிர் மனுதாரராக நம் மத்திய அரசு வழக்காடி வருகின்றனர். சரியாக சொன்னால் NGO கேட்டதற்கு இணங்க தீர்ப்பு சொல்லிவிட்டு, அந்த தீர்ப்பு மீதான தடை கோரி வழக்கு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சரி இதனால் என்ன என்பவர்களுக்காக.
இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நம்முடைய எல்லையில் எந்த ஒரு சாலை மேம்பாட்டு திட்டங்களையும் முன்னெடுக்க முடியவில்லை. குறைந்த பட்சம் சாலை அகலப் படுத்தும் பணி கூட நடைபெற இந்த தீர்ப்பு தடை செய்கிறது. முன்பு பரவாயில்லை.
ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சீனாவை ஒட்டி அமைந்துள்ள சாலை விரிவாக்கம் கூட நடக்கக்கூடாது என்கிறது இந்த தீர்ப்பு. கேட்டால் சூழலியல் மாசு என்கிறார்கள். இதில் என்ன கூத்து என்றால் இந்தியன் ரோடு காங்கிரஸ் – IRC – கூட குறைந்த பட்சம் 7.5 மீட்டர் சாலை வசதியாவது அத்தியாவசிய அவசியம் என கேட்டு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த NGO அமைப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும். யார் யார் இயக்குகிறார்கள் என்பதும் உலகம் அறிந்த பரம ரகசியம். உதாரணமாக நம்மூர் பீட்டா அமைப்பு போல என்று வைத்துக் கொள்ளுங்கள்.
சரி இதனால் என்ன பாதிப்பு என்றால். உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு வேணுகோபால் சொன்னது போல நமது ராணுவ வாகனங்கள் செல்வதற்கு கூட முறையான சரியான சாலை வசதிகள் இல்லை.
இது ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமே இல்லை. எல்லை நெடுகிலும் இதே கதை தான். மத்திய அரசு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ், கேதார்நாத், முக்தி நாத் போன்ற புண்ணிய தலங்களுக்கு சாலை வசதி செய்து தர இருக்கிறது என்று புரளி கிளப்பி பிரச்சினை செய்ய ஒரு கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது. மற்றோர் புறம் எல்லைக்கு வீரர்கள் செல்ல தாமதப் படுத்தும் விதமாகவே இன்றளவும் அங்கு சாலை வசதி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு இடத்தில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் உள்நுழைந்து அட்டகாசம் செய்து விட்டு கிளம்பி சென்றது என்கிற செய்தியின் நிஜ பின்னணி இது தான் என்கிறார்கள்.
ஆனால், உச்ச நீதிமன்றம் இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. அவர்கள், காடு அழிப்பு கூடாது. நகர் விரிவாக்கம் கூடாது. அதீத கரியமிலவாயு கூடாது. என பல கூடாதுகளை சொல்கிறார்கள். போதாக்குறைக்கு, இதனால் பனிச்சரிவு ஏற்படும், சூழியல் மாற்றம் ஏற்பட்டு விடும் எனும் NGO வாதத்தை ஏற்கிறார்கள். இடியாப்ப சிக்கலை உண்டாக்கி இருப்பதோடு காலம் தாழ்த்துவதில் குறியாக இருக்கிறார்கள் என்கிற ரீதியில் செய்தி சொல்கிறது மத்திய அரசு தரப்பு.
இதற்கேற்றார்போல NGO தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலின் ஙோன்சால்வெஸ் தனது வாதத்தில் விடாப்பிடியாக நிற்கிறார். இதனால், மினிஸ்ட்ரி ஆஃப் ரோட் ட்ரான்ஸ்போர்ட் அன்ட் ஹைவேஸ் (MoRTH) சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சார்த்தாம் ஹைவே ப்ராஜெக்ட் அந்தரத்தில் நிற்கிறது.
உதாரணமாக பனிமலை பகுதிகளில் அமைந்துள்ள அதரப்பழசான ஒற்றை சாலையில் எதிர் வரும் வாகனங்களுக்கு இடம் விடக் கூட வசதியில்லை. மொத்தமே பழங்கால பனிரெண்டு அடியில் உள்ள சாலை மட்டுமே இங்கு உள்ளது என்கிறார்கள். இந்த சாலையை வைத்து கொண்டு எப்படி பிரமோஸ் ஏவுகணை கொண்ட கனரக வாகனங்களை இந்த சாலையில் இயக்குவது என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
பதில் சொல்வதற்கு தான் இங்கு யாரும் இல்லை.
வழக்கு, வழக்கம் போல ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.