விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூர் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு நகர்புற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
சித்தாத்தூர் பகுதியிலிருந்து புறப்பட்ட நகர்புற அரசு பேருந்து 40க்கும் மேற்பட்ட ஆலம்பாடி மற்றும் முகையூர் அரசு பள்ளி மாணவர்களுடன் முகையூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, ஆயந்தூர் அருகே பேருந்தின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது இடிக்காமல் இருக்க அரசு பேருந்தின் ஓட்டுநர் இடது புறமாக பேருந்தை திருப்புகையில், எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்திலிருந்த பள்ளத்தில் பேருந்து இறங்கியதில் பக்கவாட்டில் சாயவே பேருந்தில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், காணை காவல் நிலைய போலீசாரும் காயமடைந்த மாணவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.