புதுடில்லி: டில்லியில் திமுக அலுவலக கட்டடத்தை அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டார்.
குறைந்தது ஏழு எம்பிக்கள் உள்ள கட்சிகளுக்கு, டில்லியில் அலுவலகம் கட்ட இடம் தர, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, பாஜ, தேசிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள, தீன்த யாள் உபாத்தியாயா மார்க் சாலையில், திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில், மூன்று மாடிகளுடன், நவீன வசதிகளுடன், அலுவலகம் கட்டப்பட்டது.
இந்த கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. அலுவலகம் முன்பு இருந்த கட்சி கொடியை ஏற்றி வைத்த ஸ்டாலின், பின்னர் கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மதிமுக பொது செயலர் வைகோ, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, உள்ளிட்டோரும் குத்துவிளக்கேற்றினர். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர் துரைமுருகன், எம்.பி.,க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த அண்ணாதுரை, கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டது.