நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு, ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் சூட்டி அரசு கவுரவித்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்த விவேக், சென்னை, தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றினார். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தது மட்டுமின்றி, மேடை நிகழ்ச்சிகளை தொகுப்பது, ‘மிமிக்ரி’ செய்வதிலும் கெட்டிக்காரராக இருந்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசனையை ஏற்று, ஒரு கோடி மரக்கன்றுகளை நட உறுதியேற்று செயலாற்றி வந்தார்.
மாணவர்களிடம் அதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார். திரைப்படங்களில், என்.எஸ்.கிருஷ்ணனை போல புரட்சிகரமான கருத்துக்களின் வழியே சிந்திக்க வைத்தார். அதனால், ரசிகர்கள் அவரை ‘மக்கள் கலைஞன், சின்னக் கலைவாணர்’ என்றே அழைத்தனர். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்ற விவேக், கடந்தாண்டு, ஏப்., 17ல் மாரடைப்பால் காலமானர்.
சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மற்றும் மகள் அமிர்தவர்ஷினி ஆகியோர், ‘நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு, அவரின் பெயரை சூட்ட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டில், நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையான விருகம்பாக்கம், ‘பத்மாவதி நகர் பிரதான சாலை’க்கு, நேற்று, ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் சூட்டப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு கவுரவம் அளித்துள்ளது. சாலையின் புதிய பெயர் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.