இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது விடுதலையை ஏற்க முடியாது எனக் கூறி, தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுதொடர்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரசை விமர்சித்தார். மேலும், ராஜீவ் காந்தி குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் சீமானின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு.
முன்னாள் பிரதமர் ராஜீவை காந்தி இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம், சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்? துடுக்குத்தனமாக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பேசுவது வேறு விதமாக இருக்கும்.
சீறுவது போல வாயை திறக்கலாம். சீற்றம் வராது, காற்று தான் வரும். சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர். ராஜீவ் காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை. யார் தியாகி, யார் தியாகி இல்லை என்று அவர் தீர்மானிக்கக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.