‘ஹெல்மெட்’ அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துசெல்வோர், ‘ஹெல்மெட்’ அணிவது கட்டாயம். மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்டநகரங்களில், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்துவாகனம் ஓட்டுகின்றனர்.
பின், இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிகின்றனர் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.
பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்தபோலீசாரிடம், வாகனத்தைபறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கிவந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ‘போலீஸ்’ என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.