கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஆண்டு விவசாய நிலங்களில் அமோக விளைச்சல் இருந்து வருகிறது. இந்த நிலையில், திருக்கோவிலூர் அருகே உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மட்டும் 2 கோடியே 68 லட்சம் ரூபாய்க்கு விவசாயிகளின் விலை பொருட்கள் விற்பனையானது.
இதில், நெல் வரத்து 6,000 மூட்டையாகவும் அதிகபட்சமாக நெல்லிற்கு அதிகபட்ச விலையாக 1831 ரூபாயும் குறைந்தபட்ச 1145 விலையாக ரூபாயும் விற்பனையானது. அதேபோன்று, எள் மூட்டை ஒன்றிற்கு அதிகபட்சமாக 12,750 ரூபாயாகவும் குறைந்தபட்சமாக 10,690 ரூபாயாகவும், மணிலா மூட்டை ஒன்றிற்கு அதிகபட்சமாக 9,071 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 7,589 ரூபாயாகவும், உளுந்து 2000 மூட்டை வரத்தாகவும் இதில் அதிகபட்ச விலையாக 7136 ரூபாயாகவும் குறைந்தபட்ச விலையாக 6889 ரூபாயாகவும், மக்காச்சோளம் 850 மூட்டை வரத்தாகவும் இதில் அதிகபட்சமாக 2263 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 2190 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேபோன்று, தட்டைப்பயிர் அதிகபட்ச விளையாக 6147 ரூபாயாகவும் குறைந்த பட்ச விலையாக 3410 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும், மணிலா, பச்சைபயிறு, நாட்டு கம்பு, வீரிய ரக கம்பு, ராகி, தட்டைப்பயிர், திணை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களும் கணிசமான அளவில் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவடை காலம் என்பதாலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.