விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் தேர் தூக்கும் திருவிழா புகழ்பெற்ற திருவிழாவாகும். இதனை காண மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 25,000 த்திற்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த திரௌபதி அம்மன் கோவிலை புனரமைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை உரிய நிதி வழங்கிட வேண்டுமென தொடர்ந்து கிராம பொதுமக்கள் வைத்த கோரிக்கையினை அடுத்து, இந்தக் கோவில் பிரகாரம், கோபுரம், கோவிலின் குளம் புனரமைப்பு பணிக்காகவும் அதே போன்று புதிதாக கோவில் அருகே திருமண மண்டபம் அமைப்பதற்காகவும் என மொத்தம் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி இந்து சமய அறநிலைத்துறை மூலம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் குறித்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.