திருவெண்ணெய் நல்லூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ளது டி.எடையார் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் முகில்வணன் ஆஷா தம்பதியினர். இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தையான தியாஸ்ரீ இன்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் ஆகியும் குழந்தையின் சத்தம் கேட்கவில்லை என அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாயார் ஆஷா வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது சமையலறையில் வைக்கப்பட்டிருந்த அன்னக்கூடை தண்ணீரில் சிறுமி தியா ஸ்ரீ மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஆஷா அவரை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து உறவினர்கள் உதவியுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த போது, குழந்தை தியாஸ்ரீ வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் வீட்டில் உள்ள போது அவர்கள் பெற்றோர்கள் தங்களது கண் பார்வையில் வைத்திருக்காமல் வேறு வேலையை செய்வதே இது போன்ற உயிரிழப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.