கண்டாச்சிபுரத்தில் பாத்திர கடையின் பின்பக்க சட்டரை உடைத்து 1.20 லட்சம் பணம் 30 ஆயிரம் ரூபாய் சில்வர் பாத்திரங்கள் கொள்ளை: போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரனூர் சத்திரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வேலு என்பவரது மகன் நாராயணன்(35). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் திருவண்ணாமலை விழுப்புரம் சாலையில் கடந்த ஒரு வருடமாக ஸ்ரீ நாராயணா ஸ்டோர் எனும் பெயரில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி இரவு கடை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை திறந்த பார்த்த போது, கடையில் வைத்திருந்த சுமார் 30,000 மதிப்பிலான சில்வர் பாத்திரங்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கல்லா பெட்டியை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 1.20 லட்சம் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க சட்டரை உடைத்து உள்ளே வந்தது, கல்லாவில் இருந்த 1.20 லட்சம் பணம் மற்றும் 30,000 மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கண்டாச்சிபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகள் தெரிந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் உடனடியாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.