கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கள்ளிப்பாடி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் என்பவரது வீட்டில் நண்பகலில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்து பீரோவில் இருந்த 27 சவரன் தங்க நகைகள் மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து, ஒரு மணி அளவில் தமது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிவாசகம் பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, பீரோவில் வைத்திருந்த நகை பணம் குறித்து சோதனை செய்தபோது அவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து, மணலூர்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்தா திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கூலி தொழிலாளியின் வீட்டில் 27 சவரன் தங்க தங்க நகைகள் 4 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடந்த 31ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மாசிலாமணி என்பவரது வீட்டில் 7 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.