கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில், திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேமுதிக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான எல்.வெங்கடேசன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் 600 பேருக்கு தலைக்கவசமும், 500-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு வேட்டி சேலையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மேடையில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன்; சினிமா காட்சியை ஒப்பிட்டு நகைச்சுவையுடன் கூறி திருக்கோவிலூரின் நிலையை வெளிப்படுத்தினார்.
சினிமா காட்சிகளில் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் டிரஸ் என்னுடையது என்பது போல, இந்த திருக்கோவிலூரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் என்னால் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கொண்டு வந்தது எனவும், ஆனால் தற்போது பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள வளைவு தற்போதைய திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி அவர்களால் வைக்கப்பட்டது என கூறினார். அப்படி வைத்திருந்தாலும் திருக்கோவிலூர் பேரூராட்சி பேருந்து நிலைய நுழைவு வாயில் என உள்ளது. திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை இந்த பேரூராட்சி என்ற பெயர் பலகையை கூட இந்த அரசும் அமைச்சரும் மாற்றாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே மழை பெய்ய தொடங்கியதைடுத்து திருக்கோவிலூர் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பொதுமக்கள் காத்திருந்து நலத்திட்ட உதவிகளை கொட்டும் மழையிலும் வாங்கிச் சென்றனர்.