ஜெயிலா் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னா் நடிகா் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறாா். இத்திரைப்படத்தின் காட்சிகள் தற்போது கன்னியாகுமரி பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக , கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் திங்கள்கிழமை வந்தாா். அங்கு அவருக்கு ரசிகா் மன்றத் தலைவா் சக்திவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியது:புவனா ஒரு கேள்விக்குறி படப்பிடிப்புக்காக கடந்த 1977ஆம் ஆண்டு தென்மாவட்டங்களுக்கு வந்திருக்கிறேன். அதன்பிறகு படப்பிடிப்பிற்காக இப்போதுதான் வருகிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவா்களாக உள்ளனா். ஆனால், அவா்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நடிகா் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. அப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றாா்.