கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி மாணவர்கள் காவலர்களுடன் இணைந்து கள்ளச்சாராயத்திற்கு எதிராக பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
வீரபாண்டி அரசு பள்ளியில் பயின்று வரும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் “வேண்டாம் வேண்டாம் கள்ளச்சாராயம் வேண்டாம்,” “ஒழிப்போம் ஒழிப்போம் சாராயத்தை ஒழிப்போம்” என்ற பதாகைகளுடன் வீரபாண்டி கிராமம் முழுவதும் பேரணியாக சென்று முழக்கங்களை எழுப்பினர். அரகண்டநல்லூர் காவல் நிலையத்தின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வீரபாண்டி கிராமத்தில் அதிக அளவு சாராய விற்பனை நடைபெறுவதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து விழிப்புணர்வு பேரனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.