விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரனுர் காலனி பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்பகுதி மக்கள் 35 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மீண்டும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அப்பகுதி மக்களின் 35 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில் 72 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் பொன்முடி வழங்கினார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனையும் நிறைவேற்றும் வகையில் இன்று 11 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி,
தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பார்த்து மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் நாம் செயல்படுத்தி உள்ள ஆயிரம் ரூபாயை தாருங்கள் என கேட்கின்றனர். அதேபோல் நாம் மட்டும் தான் இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி ஒரு காலத்தில் வடமாநிலங்கள் எல்லாம் வேறு மாதிரி இருந்தது.இன்று நம்முடைய மாநிலத்தை பார்த்து தான் வட மாநிலங்கள் கூட, இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்தில் கூட திராவிட மாடல் ஆட்சி மலரும், இதுதான் திராவிட மாடல் ஆட்சி ஆணும் பெண்ணும் சமம், எல்லா மதத்தினரும் சமம், எல்லோரும் சமம், ஆண் பெண் என்பது மட்டும்தான் வேறு, நாம் அனைவரும் சமம் தான் அனைவரும் ஒன்றுதான் என்ற உணர்வை உருவாக்கியது தான் பெரியார், அண்ணா, கலைஞர், அவரது வழியில் வந்த தளபதியும் தற்போது செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.
நிகழ்வின் போது அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கள் ஊருக்கு வரும் பேருந்து காலையில் கால தாமதமாக வருவதாக தெரிவித்தனர். இதனை அடுத்து உடனடியாக திருக்கோவிலூர் பேருந்து பணிமனை மேலாளரை தொடர்பு கொண்ட பள்ளி செல்லும் நேரத்திற்கு முன்னதாக காலை 8.30 மணிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கிய அமைச்சருக்கு நரிக்குறவர் இன மக்கள் மணி மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.