கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க வெகு விமரிசையாக ஊர்வலம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்து விநாயகர்கள் சிலைகளையும் ஒழுங்குபடுத்தி ஏரிக்கரை மூலை பகுதியில் இருந்து மேலவீதி வழியாக பேருந்து நிலையம் சென்று அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம்,அரகண்டநல்லூர் பகுதியில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி விநாயகர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது இந்து முன்னணியினர் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் ஏற்படுத்தியிருந்த பாதைக்கு மாறாக வடக்கு வீதியில் (மாற்றுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதையில்) செல்ல முற்பட்டனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் இந்து முன்னணினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து அரை மணி நேரத்திற்கு மேலாக போலீசார் உடன் இந்து முன்னணியினர் மாடவீதி வழியாக செல்ல வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் உரிய அனுமதி இல்லாததால் ஏற்கனவே வகுத்த பாதையின் வழியே விநாயகர் சிலை செல்ல வேண்டுமென அறிவுறுத்தி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் இந்து முன்னணி அமைப்பினருடன் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். அரை மணி நேரமாக நீடித்த இந்த பேச்சு வார்த்தையை அடுத்து அடுத்த ஆண்டு நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று மாற்றுப் பாதை வழியாக விநாயகர் சிலை செல்லும் என சவாலாக கூறிவிட்டு அங்கிருந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர். இதனால் விநாயகர் ஊர்வலத்தின் போது திருக்கோவிலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில் தேர் செல்லும் நான்கு மாத வீதியில் விநாயகரை கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்காததை அடுத்து,அடுத்த முறை நீதிமன்ற உத்தரவை பெற்று மாடவீதி வழியாக விநாயகரை கொண்டு செல்வோம் என தெரிவித்தனர்.