விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.
இக்குறைதீர் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி, முகாமில் கோரிக்கையினையும்,மொபைல் எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு பெறப்படுகிறது.
மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் மனுவினையும், பொது விநியோக திட்ட ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் மனுவாக அலுவலர்களிடம் கொடுக்கலாம்.இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக்கொண்டு, பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.