கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பத்திரபதிவிற்கு அதிகப்படியான லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், டி.எஸ்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் நுழைவு வாயில் பூட்டி வைத்து உள்ளிந்த சார் பதிவாளர் வேல்முருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள், பத்திர பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு ஒவ்வொருவராக வெளியே அனுப்பி வைத்தனர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டதால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனர் இரவு 10 மணி வரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இறுதியில் ₹.2,64,000 பணத்தினை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை அன்று காலை 6 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு திருஷ்டி கழிக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.