கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கோமாலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஈயம் பூசும் தொழில் செய்யும் மூர்த்தி என்பவர் அவரது குழந்தைகளுடன் தனது அண்ணன் ஊரான கோமாளுர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அண்ணன் மகன் கார்த்தியுடன் சிறுவன் அருண்(6) அருகாமையில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால் இடறி கிணற்றில் அருண் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்தி உடனடியாக ஊருக்குள் வந்து அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்து கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதற்குள் சிறுவன் அருள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். பொதுமக்கள் நெடுநேரம் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இது குறித்து ரிஷிவந்தியம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக கிராம மக்கள் உதவியுடன் மின் மோட்டார் அமைத்து கிணற்றில் இருந்த தண்ணீரை 5 மணி நேரமாக வெளியேற்றினர். நீர் முழுவதும் வெளியேற்ற பட்ட பின்னர் அடி பகுதியில் சிறுவனின் உடல் மிதந்துள்ளது. இதனை அடுத்து ரிஷிவந்தியின் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் இறங்கி சிறுவனின் உடலை பத்திரமாக மீட்டு வெளியே எடுத்து வந்தனர். குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீன் பிடிக்க சென்ற இடத்தில் கால் இடறி கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.