கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சித்தபட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன்(45) என்பவர், சொந்தமான விவசாய நிலத்தில் ஆடு கொட்டகை அமைத்து 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 08.09.2024 அன்று அவரது கொட்டகையில் இருந்த 5 ஆடுகள் காணாமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது, முகமுடி அணிந்து மூன்று மர்ம நபர்கள் உள்ளே வருவதும், பின்னர் சிசிடிவி கேமராக்களை சாக்கு பையால் மூடுவதும் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ராமச்சந்திரன் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் திருமால் சிசிடிவி கேமரா காட்சிகளில் இருந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் முகமூடி அணிந்து வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, மணலூர்பேட்டை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ்(25), சித்தப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(21) மற்றும் சூர்யா(24) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து ஆறுமுகம் மற்றும் பவுல்ராஜை மணலூர்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான சூர்யாவை(24) தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.