கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள செட்டித்தாங்கள் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து கரும்பு விவசாயிகள் தங்கள் நிலங்களில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் சர்க்கரை ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சமீப நாட்களாக கரும்பு ஏற்றி வரும் டிராக்டர் ஓட்டுநர்கள் வாகனத்தில் ஏற்றக்கூடிய கரும்பின் அளவை விட அதிக டன் ஏற்றியும், முக்கிய சாலையில் செல்லும் பொழுது வாகனத்தை வேகமாகவும் ஆபத்தான முறையில் சாகசம் காட்டியும் இயக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.
காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இதுபோல் அட்டூழியம் செய்யும் கரும்பு டிராக்டர் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.