கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக 6 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. இதனால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த கிராம மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தனிப்படை ஒன்றை அமைத்தார். அதில் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் மேற்பார்வையில் திருக்கோவிலூர் உட்கோட்ட ஆய்வாளர் பாலாஜி தலைமையில் ஐந்து உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற அனைத்து இடங்களும் கிராமத்திலிருந்து ஒதுக்குப்புறமாக விவசாய நிலத்தில் ஓட்டினார் போல் உள்ள வீடுகள் என கண்டறியப்பட்டது.
மேலும் திருடப்பட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதையும் கொள்ளையர்கள் நன்கு அறிந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை கண்டறிந்த தனிப்படை போலீசார் உடனடியாக தொழில்நுட்ப வசதியுடன் குறிப்பிட்ட கொள்ளை நடந்த நாட்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த செல்போன் எண்களை தொழில்நுட்ப வசதியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மூன்று செல்போன் எண்கள் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் இருந்ததும் அதன் பின்னர் நீண்ட நாட்களாக ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதையும் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து அந்த மூன்று செல்போன் எண்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு எண் பாண்டிச்சேரியை சேர்ந்தது என்றும் மற்ற இரு எண்களும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தது என்றும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தஞ்சாவூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதிக்கு மூன்று குழுக்களாக பிரிந்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்த மூன்று செல்போன் எண்களும் ரமேஷ், மணிரத்தினம் மற்றும் சுரேஷ் ஆகிய மூவரது செல்போன் எண்கள் என தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
மீண்டும் அந்த செல்போன் எண்கள் சுவிட்ச் ஆன் ஆக அவர்கள் மூவரையும் தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பெயரில் பிடித்து மணலூர்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்னர் போலீசார் தங்களது பாணியில் தனித்தனியே மூன்று பேரையும் விசாரணை மேற்கொண்ட போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் ஆறு இடங்களிலும் அதே போல் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர், எடைக்கல், எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், வரஞ்சிறம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெறையூர் வாணாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின்னர், அவர்களிடம் இருந்து 21 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 14 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காலை நேரங்களில் காய்கறி விற்பனையை டாட்டா ஏஸ் வாகனத்தில் செய்வதுபோல வந்து, கிராமம் கிராமமாக நோட்டமிட்ட இந்த மர்ம கும்பல், இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதை கண்ட போலீசார் காய்கறி விற்பனைக்கு பயன்படுத்தி டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பகல் நேரங்களில் காய்கறி விற்பனை செய்வது போல நாட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.