பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.
நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு தெரிவித்தார். வெவ்வேறு வங்கிகள் மற்றும் வெவ்வேறு விதமான கணக்குகளை பொறுத்து, இந்த அபராத தொகை மாறுபடுகின்றன.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., கடந்த 2020 – 21ம் நிதியாண்டு முதல், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திய நிலையில், அதன் பிறகும் இந்த தொகை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளில்
- பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.1,538 கோடி),
- இந்தியன் வங்கி (ரூ.1,466 கோடி),
- பாங்க் ஆஃப் பரோடா (ரூ.1,250 கோடி),
- கனரா வங்கி (ரூ.1,157 கோடி),
- பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.827)
உள்ளிட்ட வங்கிகளில் அதிகபட்சமாக அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த 2019-20 ஆகிய ஆண்டில் மட்டும் ரூ. 640 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பிந்தைய வருடங்களில் அவ்வங்கியானது அபராதத் தொகையை வசூலிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன. தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை. இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்” எனப் பதிவிட்டுள்ளார்.