கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், இன்று மாலை திருக்கோவிலூர் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டிஎஸ்பி பார்த்திபனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் புறவழிச்சாலையில் ஈடுபட்ட தீவிர வாகன தணிக்கையில் கார் ஒன்றில் கடத்திவரப்பட்ட 50 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட காரின் ஓட்டுனரான திருவண்ணாமலை மாவட்டம் சு.வாளவெட்டி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் வேல்முருகன் 24 என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட உணவுப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 20 மூட்டைகளில் 10 க்கும் மேற்பட்ட முட்டைகள் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக அச்சிடப்பட்டு ஒப்பந்ததாரரிடம் இருந்து நேரடியாக ரேஷன் கடைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்ட மூட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது.