வேளாண் பட்ஜெட்டில் விடுபட்டுப்போன விவசாயத் தொழிலாளர்கள்- ரவிக்குமார் தமிழக வரலாற்றில் முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து கிராமங்களிலும் கலைஞர் பெயரால் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்; நெல், கரும்பு கொள்முதல் விலை உயர்வு; நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்; டெல்டா விவசாயிகளின் மேம்பாட்டுக்காக திருச்சி நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இடையிலான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவித்திருப்பது; கடலூர் மாவட்டத்தில் பலாவுக்கான சிறப்பு மையம்; வடலூரில் தோட்டக்கலை பூங்கா; புதிதாக 10 உழவர் சந்தைகள் எனப் பல்வேறு பாராட்டத்தக்க அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன
. ஆனால் விவசாயத் தொழிலாளர் நலன் குறித்த அறிவிப்பு ஏதுமில்லை. விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவர்களையே அது குறிக்குமென்பது பொதுப்புத்தியில் பதிந்துபோயுள்ளது.நிலத்தில் வேலைசெய்து விளைவிக்கும் தொழிலாளர்களை எவரும் விவசாயி என எண்ணுவதில்லை. நிலம் வைத்துள்ள விவசாயிகள்தான் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக முடியும், கடன்பெற முடியும். விவசாயத்துக்கென பொதுத்துறை வங்கிகளால் கொடுக்கப்படும் கடன்களையும் அவர்களே பெற முடியும். பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் நிலம் வைத்திருந்தால்தான் பதிவுசெய்துகொள்ள முடியும். குறைந்த வட்டியில் விவசாய நகைக் கடன் பெறவேண்டும் என்றால்கூட நிலம் சொந்தமாக இருக்கவேண்டும். கூட்டுறவு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், வரி ரத்து, வட்டி தள்ளுபடி என அரசு அறிவிக்கும் எல்லா சலுகைகளும் நிலம் உள்ளவர்களுக்குத்தான்.
அவை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தருவதில்லை.தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடரின்போது மட்டுமின்றி விவசாய நிலங்களின் பரப்பு சுருங்கிவருவதால் சாதாரண காலங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயத் தொழிலாளர்கள்தான். ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டதால் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் தமது ஊர்களைவிட்டு இடம்பெயர்ந்து பெரு நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது. இப்படி ’வேளாண் அகதிகளாக’ விரட்டப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நகரங்களிலும் வேலை கிடைப்பதில்லை.
இதனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.தேசிய குற்ற ஆவண மையத்தின் ( என்.சி.ஆர்.பி ) அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டில் 827 விவசாயத் தொழிலாளர்களும் 2015 ஆம் ஆண்டில் 604 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு 6 விவசாயிகளும் 421 விவசாயத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் தற்கொலைசெய்து இறந்ததாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலையில் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் இருக்கிறது. வறுமையும், வேலையின்மையுமே விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகிறது.நூற்றுக் கணக்கில் தற்கொலை நேர்ந்தாலும் விவசாயிகளின் தற்கொலை என்பது நாடுதழுவிய பிரச்சனையாக எழுப்பப்பட்டதுபோல விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றப்படவில்லை.
அதற்குக் காரணம் அவர்கள் திரட்டப்பட்ட தொழிலாளர்களாக இல்லை என்பதுதான். அவர்களுக்கென பரிந்துபேச அரசியல் கட்சிகளும் முன்வருவதில்லை.விவசாயத் தொழிலாளர்களின் கூலி மற்ற துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலியைவிட மிக மிகக் குறைவு. அவர்களுக்கான ஊதியம் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையிலிருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி குறைந்தபட்ச கூலியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
இந்தக் காலவரையறை மிகவும் அதிகமாக இருக்கிறது எனவே இதை மாற்றி அமைக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.2001ஆம் ஆண்டு சென்னையில் கூடிய தென்னிந்திய மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான குறைந்தபட்ச கூலியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மற்ற துறைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் திருத்தி அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதைத் தொழில் நிறுவனங்கள் ஏற்கவில்லை.
பழையபடியே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றையெல்லாம் விரிவாக ஆராய்ந்த தமிழக அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்ச கூலியைத் திருத்தியமைப்பது என 2004ஆம் ஆண்டில் முடிவு செய்தது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தியமைக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி தமிழ்நாட்டில் உழவு வேலையில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளி ஏர் கலப்பை, எருதுகள் ஆகியவற்றைத் தாமே கொண்டுவந்தால் அவருக்கு 500 ரூபாயும், வெறும் ஆளாக வந்து உழவுவேலை செய்தால் 400 ரூபாயும் சம்பளம் தர வேண்டும்.
உழவு வேலை தவிர விதைத்தல், நடவு செய்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட அனைத்துவிதமான விவசாய வேலைகளுக்கும் ஒரு நாள் சம்பளம் 229 ரூபாய் மட்டும்தான். அரசாங்கம் என்னதான் முடிவுசெய்து அறிவித்தாலும் ஆங்காங்கே இருக்கும் நிலமைக்கு ஏற்றபடி நிலவுடமையாளர்களால்தான் விவசாயத் தொழிலாளர்களின் கூலி தீர்மானிக்கப்படுகிறது.
நிலவுடமையாளர்கள் கொடுக்கும் கூலி அரசாங்கம் நிர்ணயித்த கூலியைவிட எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். நிலவுடமையாளர்கள் குறைவாக சம்பளம் கொடுப்பது மட்டுமல்ல அரசாங்கமும் குறைந்த கூலியையே தருகிறது. நூறுநாள் வேலைத் திட்டத்தின்கீழ் கொடுக்கப்படும் ஊதியம் பல நேரங்களில் குறைந்தபட்ச கூலியைவிடக் குறைவாக இருக்கிறது எனப் புகார்கள் உள்ளன.குறைந்தபட்ச கூலி சட்டம் என்னதான் சொன்னாலும், விவசாயத் தொழிலாளர்கள் வாங்கும் உண்மையான கூலி எவ்வளவு என்பதை அறிய மத்திய அரசு ஊரகத் தொழிலாளர் விசாரணை ( Rural Labour Enquiry Report ) அறிக்கை என ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுவருகிறது.
அதில் தெரியவரும் விவரத்தைப் பார்த்தால் அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக 1950-51 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விவசாயத் தொழிலாளர் விசாரணை அறிக்கை அப்போது ஆணுக்கு நாளொன்றுக்கு ஒரு ரூபாய் ஒன்பது பைசாவும், பெண்ணுக்கு நாளொன்றுக்கு அறுபத்தெட்டு பைசாவும் கூலியாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறது.
1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நான்காவது அறிக்கை ஆணுக்கான கூலி நான்கு ரூபாய் எழுபத்து இரண்டு பைசா எனவும், பெண்ணுக்கான கூலி மூன்று ரூபாய் ஐம்பத்தாறு பைசா எனவும் தெரிவிக்கிறது. 1993-94 ல் வெளியான ஆறாவது ஊரகத் தொழிலாளர் அறிக்கை ஆணுக்கான ஒருநாள் கூலி இருபத்தொரு ரூபாய் முப்பத்தைந்து பைசா என்றும், பெண்ணுக்கான கூலி பதினைந்து ரூபாய் பதினெட்டு பைசா எனவும் தெரிவிக்கிறது. ( D.R.Yugandar, Grassroots Economics – The Poverty of agricultural labourers , Dominant Publishers and Distributors, New Delhi , 2004 )கூலி குறைவாகக் கிடைப்பதால் விவசாயத் தொழிலாளர்கள் கடனாளிகளாக மாறுகின்றனர்.
1993-94 நிலவரப்படி விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் 35.5 % சதவீதம் கடன் சுமையில் அல்லலுற்றதாக விவசாயத் தொழிலாளர் விசாரணை அறிக்கை கூறுகிறது. ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அவர்கள் கடன் பெற்றிருந்தனர்.
இப்படியான கடன் சுமையும், வேலையின்மையும்தான் அவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என தமிழ்நாடு அரசு அறிவித்த போது அதில் விவசாயத் தொழிலாளர்களுடைய நலனும் உள்ளடக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனோ அது இந்த பட்ஜெட்டில் விடுபட்டுப் போயிருக்கிறது. தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போதாவது விவசாயத் தொழிலாளர்களுடைய நலனைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் விவசாயத் தொழிலாளர்களை வேளாண் துறையுடன் இணைக்கவேண்டும்.
மீன்பிடித் தடைக் காலத்தில் வேலையின்றி இருக்கும் மீனவ மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘ தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தைப்போல ( NFSRS ) விவசாயத் தொழிலாளர்களுக்கான திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.