கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. திறந்த முதல் வாரத்தில் எந்த புதிய படமும் வெளியாகாத நிலையில் இரண்டு படங்கள் இன்று வெளியாகின.ஒன்று ருத்ரதாண்டவம் மற்றொன்று சிவகுமாரின் சபதம்.
ருத்ரதாண்டவம் படம் தான் இன்று ஹாட் டாபிக். அதற்கு காரணம் அதன் ட்ரைலர் மற்றும் இயக்குனர். ஆனால் சத்தமில்லாமல் வந்துள்ள படம் ஹிப் ஹாப் தமிழாவின் சிவகுமாரின் சபதம். படத்தை இயக்கியதும் ஹிப் ஹாப் தமிழா ஆதி. பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று வெளிவந்துள்ள சிவகுமாரின் சபதம். புதிய கதை களத்தினை கொண்டுள்ளது. தமிழக சினிமா இயக்குனர்கள் ட்ரெண்ட்க்கு ஏற்ற மாதிரிபடங்களை தருவார்கள். பேய் படம் காமெடி என்ற ட்ரென்ட்க்கு ஏற்றவாறு படம் இயக்குவது தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்.
தற்போது ட்ரெண்ட் விவசாயம். எல்லா படத்திலும் மைய பொருளாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட டயலாக்கில் விவசாயத்தினை பேசுவது அரங்கேறி வருகிறது. விவசாயத்தைப் போலவே தமிழகத்தில் மற்றொரு முக்கிய தொழிலான நெசவுத் தொழில்
நெசவு தொழில் பற்றி யாரும் பேசவில்லை,படமும் எடுக்கவில்லை. அதன் குறையை தீர்த்து வைத்துவிட்டார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. காஞ்சி பட்டை மையப்படுத்தி கதை களத்தினை அமைத்து அதில் வெற்றி பெற்றாரா ஹிப் ஹாப் தமிழா என்பது தான் திரைக்கதை.
பட்டுப்புடவைக்கு பெயர்பெற்றது காஞ்சிபுரம். பல நெசவாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் காஞ்சி பட்டு தான் பட்டுகளில் பலவகை உண்டு. அதில் முக்கியமானது ராஜபட்டு. இந்த ராஜபட்டுநெசவாளர் குடும்பத்தின் கதையை மையப்படுத்திய கதை தான் சிவகுமாரின் சபதம்.
கதை :
ராஜபட்டு நெய்யும் பாரம்பரியமிக்க பட்டு நெசவாளர் இளங்கோ குமணன். அவரது பேரன் ஆதி மீது அதிக பாசம் வைத்துள்ளவர். காஞ்சிபுரத்தில் வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞனாக வலம் வருகிறார் ஆதி. ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஆதியை அவரது சித்தப்பா ராகுல், தன்னுடைய மாமனார் விஜய் கார்த்திக்கின் சில்க்ஸ் நிறுவனத்தில் பணி புரிய அழைத்து செல்கிறார்.
விஜய் கார்த்திக்கின் தங்கை மகள் மாதுரியை தனது கல்லூரி காலத்திலிருந்தே காதலித்தவர் ஆதி. மாதுரியை விஜய் கார்த்திக்கின் மகனும் காதலிக்க அதனால் பிரச்சினை ஏற்படுகிறது. தனது மாப்பிள்ளை ராகுலையும், ஆதியையும் தனது வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் விஜய் கார்த்திக். அவரிடம் சபதம் போட்டு வருகிறார் ஆதி. அவர் என்ன சபதம் போட்டார், அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் இடைவேளை வரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் படம் நகர்கிறது. அதன்பிறகு முழு நீள குடும்பக் கதையாகப் படம் மாறிவிடுகிறது. காதல், காமெடி, ஆக்ஷன் என இரண்டரை மணி நேரப் படத்தையும் என்டர்டெயின்மென்ட்டாக மட்டுமே தர வேண்டும் என நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆதி.
கலகலப்பான ஒரு பேரன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி ஏமாற்றவில்லை. பட்டர்பிளை மண்டை, முறுக்கு மீசை, பூ போட்ட சட்டை என இந்தக் காலத்து இளைஞர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு தனது கதாபாத்திரத்தை அமைத்துள்ளார். காதல், காமெடி, பாசம், ஆக்ஷன் என கலந்துகட்டி அடித்திருக்கிறார்.
ஆதியின் காதலியாக புதுமுகம் மாதுரி. வழக்கமான கதாநாயகிகள் போல காதலிப்பதை மட்டும் வேலையாக வைத்திருக்கிறார். இளம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்ட பபிள்கம் காட்சியை இவருக்காகவே அமைத்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் தேற வேண்டும்.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆதியின் தாத்தாவாக இளங்கோ குமணன். காஞ்சிபுரத்தில் ஒரு வயதான நெசவாளர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். நெற்றியில் விபூதி, வேட்டி, சட்டை, அமைதியான, பாசமான முகம் என இருக்கும் இவரை இனி தமிழ் சினிமாக்களில் அடிக்கடிப் பார்க்கலாம்.
படத்தில் வில்லனும் இருக்கிறார், வில்லியும் இருக்கிறார். சந்திரசேகரன் சில்க்ஸ் என்ற பெரிய நிறுவனத்தின் முதலாளியாக விஜய் கார்த்திக். அவரது தங்கையாக ரஞ்சனா நாச்சியார். இருவரும் வில்லத்தனத்தை சரியாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
ஆதியின் சித்தப்பாவாக பிரான்க்ஸ்டர் ராகுல், காட்சிக்குக் காட்சி விதவிதமாக நடிக்கிறார். ஆதியின் நண்பனாக கதிர். இருவரும் சில காட்சிகளில் சிரிக்க வைத்தாலும், சில காட்சிகளில் பொறுமையை சோதிக்கிறார்கள்.
காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில்தான் கதை அதிகம் நகர்கிறது. ஆனால், இரண்டே இரண்டு வீட்டை மட்டும் காட்டிவிட்டு கதையை முடித்துவிடுகிறார்கள். ஒரு தெருவைக் கூட முழுமையாகக் காட்டவில்லை.
நெசவாளர்கள் பற்றிய படம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு வசனத்தில் மட்டும் நெசவாளர்களின் பிரச்சினையைப் பற்றி ஆதி ஒரு வரி வசனம் பேசுவதுடன் அவர்களது பிரச்சினையை பேசிவிட்டதாக நினைத்துவிட்டார் போலும். நுனிப்புல் மட்டுமே மேய்ந்திருக்கிறார். அவர்களின் பிரச்சினைகளை ஆழகமாகச் சொல்லவேயில்லை.
சிவகுமாரின் சபதம் பாதி நிறைவேற்றம் மீதி ஏமாற்றம்!