சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “அடுத்த 48 மணி நேரத்திற்கு, மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.” என புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் என புவியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) (25.10.2021) திங்கள்கிழமை அறிவித்துள்ளது. தற்போது தமிழகம் மற்றும் கேரளாவின் தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருந்து வந்தாலும் சென்னை மற்றும் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் இந்த வார இறுதியில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா ஆகியவற்றில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் 28-ந் தேதி பருவமழை தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்றே பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கரூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் பரவலாக மழை பெய்தது மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இது வடகிழக்கு காற்று உள்வரும் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். “திங்கட்கிழமைக்குப் பிறகு, அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்யும், ஆனால் கடலோர தமிழகத்தின் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று சென்னை ஐஎம்டியின் புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் என புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி மற்றும் 25 டிகிரியாக இருக்கும். சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகத்தில் அக்டோபர் 28 முதல் 30 வரை கனமழையை எதிர்பார்க்கலாம்.” என்று கூறியுள்ளார்.
வானிலை முன்னறிவிப்பு சேவையை வழங்கி வரும் ‘ஸ்கைமெட் வெதர்’ அதன் செய்தி வெளியீட்டில், “சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. இந்த வாரத்தில் அது அதிகரிக்கும். அக்டோபர் 28 முதல் 30 வரை கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஈரமான காலநிலை நவம்பர் மாதத்தின் தொடக்க நாட்கள் வரை நீட்டிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளது