இன்று அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யா நடிப்பில், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம்.அநேகமாக வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். பீரியட் படத்தை இவ்வளவு நாசூக்காக சொல்லி இருப்பதற்காகவே நிச்சயம் இந்த படக்குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சந்துரு குறித்தான இந்த படத்தில் சந்துருவாக சூர்யா வாழ்ந்து காட்டி இருக்கிறார் .ஸ்ரீ ரங்கத்தில் பிறந்த இவர் சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞராக.பின்னர் புகழ் பெற்ற நீதிபதியாக இருந்த திரு. சந்துரு குறித்தான படம் என்கிறார்கள். இவர் மாணவராக இருந்த காலத்திலேயே 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணி பிரச்சனையில் விவசாய சங்கத்தினரை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி பெரும் கவனத்தை ஈர்த்தார் என்கிறார்கள்.
1990 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.
சமீபத்திய நாட்களில் வெளிவந்த அசுரனும் இதே போன்ற ஒரு கதை களம் கொண்ட காலக் கட்டம் தான். ஆனால் இதில் அதனை மிக நளினமாகவும் கவனமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வசனங்களும் கூர்மையுடன் இருக்கிறது.
வட மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக விழுப்புரம் கடலூர் பன்ரூட்டி விருத்தாசலம் சுற்றி உள்ள பகுதிகளில் ஏன் எதற்காக எவ்வாறான ஜாதி அரசியல் இன்றைக்கு செல்லுபடியாகுகிறது என்கிற ரீதியிலான கேள்விகளுக்கான பதில் இது போன்ற விஷயங்களில் கண்டெடுக்க கூடும். கிட்டத்தட்ட ஆவணம் போலும் சொல்லலாம்.
இப்போது இந்த திரைப்படத்திற்கு வருவோம்.
காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’.இருளர் சமுதாய இன மக்களை குறித்தும் அவர்களின் வாழ்வாதார நிலையை விளக்கியும் இந்த படம் செல்கிறது. ஆனால் அத்தனை நளினமாக சொல்லி இருக்கிறார்கள்.
இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு நடிப்பில் மணிகண்டன். செங்கல் சூளையில் வேலை, பாம்பு பிடித்து வனப் பகுதியில் விடுதல் என்று தன் குடும்பத்தை முன்னேற்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார். அவரின் மனைவி செங்கேணி நடிப்பில் லிஜோமோல் ஜோஸ் கணவன் மீது உயிராய் இருக்கிறார்.
கல் வீடு கட்டித் தருவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று மனைவியிடம் சொல்கிறார் ராஜாகண்ணு. இந்நிலையில் ஊர்த் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்துவிட அதைப் பிடித்து வனத்தில் விடுகிறார். கல் வீடு கட்டும் கனவில் ஊர் மக்களுடன் இணைந்து மாவட்டம் தாண்டி செங்கல் சூளையில் வேலை செய்யச் செல்கிறார். பாம்பு பிடித்த இடத்தில் நகைகள் காணாமல் போய்விட, அவர் மீது திருட்டுப் பழி விழுகிறது.
ராஜாகண்ணுவின் நண்பர்கள், மனைவி, சகோதரி என அனைவரும் காவல்துறை அதிகாரிகளின் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். ராஜாகண்ணுவும் போலீஸாரின் பயங்கரத் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார். பிறகு ராஜாகண்ணுவும், அவரது நண்பர்கள் இருட்டப்பன், மொசக்கட்டியும் காவல் நிலையத்திலிருந்து தப்பி விடுகின்றனர். இந்நிலையில் கணவனின் நிலை அறியாது கையறு நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாகத் தவிக்கிறார் செங்கேணி.
கணவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா, அவர் தப்பித்தது உண்மையா, நகைகள் திருட்டுக்கு யார் காரணம், உண்மையான குற்றவாளி யார் போன்ற கேள்விகளுக்கு உண்மையும் நேர்மையுமாக பதில் சொல்கிறது திரைக்கதை.
பொய் வழக்குகளில் கைது செய்யப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் குறித்து மிக காத்திரமான ஒரு படத்தைக் கொடுத்து, அவர்களின் வலிகளை உணர வைத்துள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல்.
எதிர் பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது.சமீபத்திய காலத்தில் சூர்யா பொதுவெளியில் ஏற்படுத்தி இருந்த பாதிப்பு அதிகம். சமூகத்தில் அல்ல.அவருக்கு. அந்த அளவிற்கு கிறுக்குத் தனமான சமாச்சாரங்கள் ஏராளம். அநேகமாக இது அத்தனைக்கும் மருந்தாக இந்த படம் இருக்கும். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவற்றிலும் இந்த ஜெய் பீம் படத்திலும் பல இடைச்செருகல் உண்டு. ஆனால் யாரையோ, எதற்கோ. சமாதானம் செய்ய காட்சிபடுத்தி இருக்கலாம். கதை நடக்கும் களம் எண்ணாயிரம் குறித்து பலருக்கும் இன்று இங்கு சரியாக தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட இடம் அது. என்ன மாதிரியான சரித்திரம் சொல்லும் பூமி இன்று அதன் தொன்மம் இழந்து.வரலாறு அழிந்து, சிதைந்த திக்கற்று நிற்கிறது. இப்படி ஏதோ ஒன்று இரண்டு கிராமங்கள் அல்ல, ஓராயிரம் கிராமங்கள் இங்கு நம் தமிழகத்தில் உண்டு. ஆனால் விலாசம் இல்லை. தெரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கும் மன விசாலம் இல்லை. என்ன செய்வது.போகட்டும் அதனை பேசும் இடமும் இது இல்லை.
அன்பை, ஒளியை, நம்பிக்கையை, இருளிலிருந்து இருளர்கள் வாழ்வுக்கு வெளிச்சம் போடும் பாதையை, இருளர் பாதுகாப்பு சங்கம் தொடங்கிய பின்னணியைப் பெரும் உழைப்புடன் பதிவு செய்த விதம் செம்ம. அந்த வகையில் ‘ஜெய் பீம்’ நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு சிறந்த சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.
எது எப்படியோ.தீபாவளி திருநாள் என்றால் புதிய திரைப்படம் பார்க்க வேண்டும் என்கிற சமீபத்திய கலாச்சாரம் படி அண்ணாத்தேவுக்கு போட்டியாக வெளிவந்துள்ள இந்த ஜெய் பீம் படத்தை அதனை காட்டிலும் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. இங்கு அதனை காட்டிலும்… என்பதை அழுத்தமாக படித்திடவும். அவ்வளவு தான் சமாச்சாரம்.