விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(25) மற்றும் ரவிக்குமார் (25) ஆகிய இருவரும் தீபாவளி அன்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற ரவிக்குமார், இருதயபுரம் பகுதியில் தலையில் அடிபட்டு கிடப்பதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் ரவிக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், சென்னையில் உள்ள ஸ்டேன்லி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த ரவிக்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரவிக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, ரவிக்குமாரின் பிரேதத்துடன்; திருக்கோவிலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் முகையூர் பேருந்து நிறுத்தத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ரவிக்குமாரின் பிரேதத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி பழனிசாமி தலைமையிலான போலீசார் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் விபத்து வழக்காக பதிவு செய்த இந்த வழக்கை, சந்தேக மரணமாக மாற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக இளைஞரின் சடலத்துடன் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியே பெரும் பரபரப்புக்குள்ளானது.