திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார்.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்மண்டலக் குழுவாகும்.
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை அடைய ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மை மிக்க கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதற்கானத் தேவையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் முல்லை பெரியாறு பிரச்சினை, தென்னிந்தியா வழியாக தீவிர வாதிகள் ஊடுருவல், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த கூட்டத்தில் பங்கேற்பது இதுவரை எந்த தகவலும் இல்லை. கடந்த காலங்களில் சந்திரசேகர ராவ் பதிலாக அவரது அமைச்சர்களே பங்கேற்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அமித்ஷாவின் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்பதும் சந்தேகம் எழுந்துள்ளது. மு.க.ஸ்டாலினும் பினராயி விஜயனும் மத்திய பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக போவதைய ஸ்டாலின் விரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதால் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பட்சத்தில் அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய ஒத்துழைப்பை தொடர் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்கான அமைப்பு ரீதியான செயல்முறையின் மூலமும் உருவாக்குவதற்கான தளத்தை மண்டல குழுக்கள் வழங்குகின்றன.