இந்திய ரிசர்வ் வங்கி( RBI) ஆன்லைனில் பணம் செலுத்துவதை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் சில புதிய விதிகளை விதித்துள்ளது. அதன் மூலம் அனைத்து வணிகர்களும், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் முக்கியமான தரவுகளை அகற்றி அதற்கு பதிலாக என்க்ரிப்ட் டோக்கன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை மேற்கொள்ளுமாறு RBI கேட்டு கொண்டுள்ளது. இந்த புதிய விதியானது 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து வங்கிகள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்கள் குறித்து தெரிவித்து வருகிறது. RBI உத்தரவுப்படி வணிகர்களுக்கான இணையதளம்/ செயலியில் சேமிக்கப்பட்ட உங்களது தரவுகள் வணிகர்களால் நீக்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் செலுத்தும்போது உங்கள் கார்டின் முழு தகவலையும் பதிவிட வேண்டும் அல்லது டோக்கனைசேஷன் தேர்வு செய்து கொள்ளவும் என்று கடந்த வாரம் HDFC தங்களது வாடிக்கையாளர்களுக்கு SMS அனுப்பியது.
கடந்த 2020 மார்ச் மாதத்தில் RBI வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, வணிகர்கள் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை குறிப்பிட்ட தளத்திலிருந்து நீக்க வேண்டும். மேலும் புதிதாக இந்த ஆண்டு செப்டெம்பரில் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் டோக்கனைஸ் செய்வதற்கான ஆப்ஷனை வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள நிறுவங்களும் ஜனவரி 1, 2022 முதல் சேமித்து வைத்திருந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை நீக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
டோக்கனைசேஷன் செய்வதால் உங்களது கார்டு விவரங்கள் அனைத்தும் என்கிரிப்டட் நிலையில் இருக்கும், அதனால் உங்களது விவரங்கள் பாதுகாக்கப்பட்டு மோசடியில் சிக்காமல் தப்பிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் 16 இலக்க டெபிட், கிரெடிட் கார்டு எண்களை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. டோக்கனைசேஷன் ]செய்வதால் எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் கார்டு விவரங்களை பதிவிட வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நீங்கள் எந்த ஒரு பரிவர்த்தனைக்கு முதல் கட்டணத்தை செலுத்தும்போது கூடுதலாக ஒரு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். பின்னர் , உங்கள் கார்டின் CVV மற்றும் OTP ஐ ஏறுவதன் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.