போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவலின் அடிப்படையில், 100 சதவீத காட்டன் சட்டைகள் என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருந்த 25 அட்டைப் பெட்டிகளை சென்னை விமான சரக்குப் பிரிவு நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஒவ்வொரு பெட்டியிலும் தலா 48 சட்டைகள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், சட்டைகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தனர். அப்போது சட்டைகளை பேக் செய்த விதத்தில் மாறுபாடு இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், அதற்குள் பவுடர் போன்ற பொருளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர்.
பரிசோதனை செய்து பார்த்ததில் தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985-ன் கீழ் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான சூடோஃபெட்ரைன் என்பது தெரியவந்தது. மொத்தம் இருந்த 1200 சட்டைகளில் 515 சட்டைகளில் இந்த போதைப் பொருளை மறைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் ரூபாய் 9.86 கோடி மதிப்பிலான 49.2 கிலோ சூடோஃபெட்ரைன் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட தகவல்களை சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.