‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ருதுராஜின் கலக்கல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் ‘லெவன்’ அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னை ‘லெவன்’ அணியில் டுவைன் பிராவோ, ஷிவம் துபே நீக்கப்பட்டு டேவான் கான்வே, சிமர்ஜீத் சிங் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
நிதான துவக்கம்: சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே ஜோடி நிதான துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன் மட்டும் கிடைத்தது. மார்கோ ஜான்சன் பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்டார் ருதுராஜ். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கான்வே, புவனேஷ்வர், மார்க்ரம் பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். ‘பவர்–பிளே’ ஓவரில் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது.
ருதுராஜ் விளாசல்: பின் எழுச்சி கண்ட ருதுராஜ், கான்வே ஜோடி, ஐதராபாத் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அட்டகாசமாக ஆடிய ருதுராஜ், உம்ரான் மாலிக் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மறுமுனையில் அசத்திய கான்வே, மார்க்ரம் வீசிய 9வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். உம்ரான் மாலிக் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ருதுராஜ், 33 பந்தில் அரைசதம் கடந்தார். மார்க்ரம் வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய ருதுராஜ், உம்ரான் வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பவுலர்கள் திணறினர்.
கான்வே கலக்கல்: உம்ரான், ஷஷாங்க் சிங் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ‘புதுமாப்பிள்ளை’ கான்வே, ஜான்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 39 பந்தில் அரைசதம் எட்டினார். இது, ஐ.பி.எல்., அரங்கில் இவரது முதல் அரைசதம். அபாரமாக ஆடிய இவர், ஜான்சன் பந்தில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்த போது நடராஜன் ‘வேகத்தில்’ ருதுராஜ் (99 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் தோனி (8), ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். நடராஜன் வீசிய கடைசி ஓவரில் கான்வே, 2 பவுண்டரி அடிக்க 200 ரன்களை கடந்தது. சென்னை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 202 ரன் குவித்தது. கான்வே (85 ரன், 4 சிக்சர், 8 பவுண்டரி), ரவிந்திர ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் நடராஜன் 2 விக்கெட் சாய்த்தார்.முகேஷ் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, கேப்டன் வில்லியம்சன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முகேஷ் சவுத்தரி வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த அபிஷேக், சான்ட்னர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். சிமர்ஜீத் வீசிய 2வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் வில்லியம்சன். முதல் விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது முகேஷ் சவுத்தரி பந்தில் அபிஷேக் (39) அவுட்டானார். ராகுல் திரிபாதி (0) ஏமாற்றினார். சான்ட்னர் வீசிய 10வது ஓவரின் 3, 4வது பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட மார்க்ரம் (17), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
பூரன் ஆறுதல்: அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், ஜடேஜா, தீக்சனா, பிரிட்டோரியஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். அபாரமாக ஆடிய வில்லியம்சன் (47), பிரிட்டோரியஸ் பந்தில் அவுட்டானார். முகேஷ் வீசிய 18வது ஓவரில் ஷஷாங்க் சிங் (15), வாஷிங்டன் சுந்தர் (2) அவுட்டாகினர். கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 38 ரன் தேவைப்பட்டன. முகேஷ் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பூரன் அரைசதம் கடந்தார். இந்த ஓவரில் 24 ரன் மட்டும் கிடைத்தன.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன் எடுத்து தோல்வியடைந்தது. பூரன் (64 ரன், 6 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் முகேஷ் 4 விக்கெட் கைப்பற்றினார். இத்தொடரில் முதன்முறையாக கேப்டனாக களமிறங்கிய தோனி, சென்னைக்கு 3வது வெற்றியை பெற்றுத் தந்தார்.1000 ரன்
மார்கோ ஜான்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சென்னை வீரர் ருதுராஜ், ஐ.பி.எல்., அரங்கில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 31 போட்டியில், ஒரு சதம், 9 அரைசதம் உட்பட 1076 ரன் எடுத்துள்ளார்.
182 ரன்
அபாரமாக ஆடிய ருதுராஜ், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த சென்னை ஜோடியானது. இதற்கு முன், 2020ல் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னையின் வாட்சன்–டுபிளசி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது அதிகபட்சமாக இருந்தது.
* தவிர, ருதுராஜ்–கான்வே ஜோடி ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ரன் சேர்த்த துவக்க ஜோடிகள் வரிசையில் 4வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களில் ஐதராபாத்தின் பேர்ஸ்டோவ்–வார்னர் (185 ரன், எதிர்: பெங்களூரு, 2019), கோல்கட்டாவின் காம்பிர்–கிறிஸ் லின் (184* ரன், எதிர்: குஜராத், 2017), பஞ்சாப்பின் ராகுல்–மயங்க் அகர்வால் (183 ரன், எதிர்: ராஜஸ்தான், 2020) ஜோடிகள் உள்ளன.