விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்டங்களை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இதில், திருவெண்ணைநல்லூரில் உள்ள பேருந்து நிலையத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, வேளாண்துறை சார்பில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வேளாண் விளைபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து, வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான காசோலைகளை வழங்கினார்.
அதேபோன்று, எடையார் மற்றும் இளந்துறை உள்ளிட்ட கிராமங்களில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.