ஒடிசா மாநிலம் திர்டோல் பகுதியில் வசித்து வருபவர் பிஜாய் சங்கர் தாஸ். இவர் ஒடிசாவின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியின் திர்டோல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணுடன் காதலில் இருந்து உள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அதற்காக திருமண பதிவு அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்ய திட்டமிட்டனர்.
பதிவு அலுவலக விதிமுறைப்படி இவர்களின் திருமணம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் நடந்திருக்க வேண்டும். அதன்படி மே 17ஆம் தேதி விண்ணப்பித்ததன் பேரில் ஜூன் 17ல் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இவ்வாறு இருக்க மணப்பெண் கோலத்தில் அவரது காதலியும், காதலியின் குடும்பத்தாரும் பதிவு அலுவலகத்தில் மாப்பிள்ளை பிஜய் சங்கர் தாஸுக்காக காத்திருந்தனர்.
எதிர்பாராத விதமாக பிஜய் சங்கர் தாஸ் திருமணம் செய்ய அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் போலீஸில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என பிஜாய் மீது புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் பிஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருமணம் குறித்து அந்த பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தாரோ, யாரும் தனக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இன்று தனக்கு திருமணம் என்று தனக்கே தெரியாது என்றும், அதனால்தான் அவர் திருமணத்திற்கு செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
தன் திருமணத்திற்கு தனக்கே அழைப்பு வரவில்லை என ஆளும்கட்சி எம்.எல்.ஏ கூறியிருப்பதும் அவர் மீது அப்பெண் புகார் அளித்திருப்பதும் வினோதமான சம்பவமாக அப்பகுதி மக்கள் கருதிவருகின்றனர்.