பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிவரும் அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மாண்புமிகு ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு.கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களை (06.07.2021) புதுடில்லியில் சந்தித்து தமிழ்நாட்டின் நீர்வளம் சம்பந்தமான பிரச்சனைகளை
சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஆலோசனைகளை பெறாமல் காட்டுவதற்கு அனுமதி தரமாட்டோம் என ஜல்சக்தித்துறை அமைச்சர் உறுதியளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
1) காவிரியில் தமிழ்நாட்டிற்கு மாதாந்திர வாரியாக நீரை பிலிகுண்டுலுவில் அளிப்பதற்கு கர்நாடக அரசை வலியுறுத்தவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் நீர் அளிப்பதை இறுதி செய்யவும், ஜல்சக்தி அமைச்சகம் தேவையான அறிவுரைகள் வழங்க வலியுறுத்தப்பட்டது.
2) கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தமிழகத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் என்றும், தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்து இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் கொடுக்கக்கூடாது என்றும் கோரிக்கைவைக்கப்பட்டது.
3) பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது பற்றியும் மற்றும் பெண்ணையாற்றின் குறுக்கே சில கட்டுமானங்களையும் நீர் இரைத்தலையும் தவிர்க்கவும் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் 2019 –ல் ஆணையிட்டுள்ளபடி விரைவில் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
4) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்துவதற்கு சிற்றணை மற்றும் மண் அணை ஆகியவற்றை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 23 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கவும், மேலும் தாமதிக்காமல் இருக்க கேரள அரசுக்கு அறிவுரை வழங்கவும், அணைக்கு செல்ல வனப்பகுதியில் உள்ள சாலையை சரிசெய்ய உடன் அனுமதி அளிக்கவும், கேரள அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
5) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து 3 வருடங்கள் ஆகிறது. அதற்கு ஒரு நிரந்தர தலைவரை இன்னும் மத்திய அரசு நியமிக்கவில்லை. ஆணையத்திற்கு தேவையான முழு நேர தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
6) கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழ் நாட்டிற்கு 83 டிஎம்சிக்கும் கூடுதலாக நீர் ஒதுக்கவும், தமிழ்நாட்டில் இணைப்புக்கால்வாயை உயர்மட்டத்தில் எடுத்துச்சென்று கல்லணையில் இணைக்காமல் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டளை கதவணையில் இணைக்குமாறும், இத்திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த இணைப்பு திட்டத்தை இறுதி செய்து உடன் தேசிய திட்டமாக செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
7) தாமிரபரணி-கருமேனியாறு நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதியளிக்க நீண்டகாலமாக தமிழ்நாடு அரசு மத்திய அரசை கேட்டு வருகிறது. இது வெள்ளநீரை உபயோகிக்க கூடிய ஒரு பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நிதி இன்னும் அளிக்கப்படவில்லை. இப்பயனுள்ள திட்டத்தை விரைவில் முழுமையாக முடிக்க நிதி வழங்குமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.712 கோடி செலவிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதியாக ரூ.487 கோடி (60 சதவீதம்) உடன் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
8) இதே போல் நீர்நிலைகள் செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இத்திட்டத்திற்குறிய நிதி ரூ.34.25 கோடி மட்டும் தான்
அளிக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.44.48 கோடி மத்திய அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிதியை உடன் அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட நிகழ்வில் தமிழக பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா இ.ஆ.ப., காவிரி தொழிற்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.